மாநகராட்சி மண்டல தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம் ஏழு வார்டுகளை இழந்து ஆளும் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு
மாநகராட்சி மண்டல தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம் ஏழு வார்டுகளை இழந்து ஆளும் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு
ADDED : செப் 04, 2024 09:22 PM

புதுடில்லி:எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி கவுன்சிலுக்கு நடந்த மண்டல வார்டு தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஏழு வார்டு குழுக்களை கைப்பற்றி பா.ஜ., அதிர்ச்சி அளித்துள்ளது.
எம்.சி.டி., நிலைக்குழு தேர்தலுக்கு தலைமை அதிகாரியை நியமிக்க மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று முன்தினம் மறுத்துவிட்டார்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய ஒரு நாள் வாய்ப்பு வழங்கப்பட்டதை அவர் கண்டித்து இந்த முடிவை எடுத்தார். வேட்பாளர்கள் தேர்வு செய்யவும், அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவும் குறைந்தபட்சம் ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் துணை நிலை கவர்னர் அலுவலகம் தலையிட்டது. தேர்தல் பொறுப்பு அதிகாரியை நியமித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் துவங்கியது.
நீண்ட இழுபறிக்குப் பின், முதல் முறையாக நிலைக்குழுக்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் விதிகள், 1958ன் படி ரகசிய ஓட்டெடுப்பு மூலம் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலையொட்டி, மத்திய டில்லியில் அமைந்துள்ள சிவிக் சென்டர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து மண்டலக்குழுக்களுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 12 மண்டல நிலைக்குழுக்களில் ஏழு மண்டல நிலைக்குழுக்களை பா.ஜ., கைப்பற்றியது. மாநகராட்சியை ஆளும் ஆம் ஆத்மிக்கு ஐந்து மண்டல நிலைக்குழுக்கள் கிடைத்தன.
புதன்கிழமை நடைபெற்ற எம்சிடி மண்டல வார்டுத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடித்து, சிவில் ஏஜென்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான நிலைக்குழுவில் அதன் ஆதிக்கத்தை முறியடித்தது.
பா.ஜ., வேட்பாளரை நிறுத்தாததால் கரோல் பாக், சிட்டி எஸ்.பி., ஆகிய மண்டலங்களில் ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. அதனால் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கேசவ் புரத்தில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை. பா.ஜ., உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நரேலா, சிவில் லைன்ஸ், கேசவ் புரம், ஷாஹ்தாரா வடக்கு, ஷாஹ்தாரா தெற்கு, நஜாப்கர் ஆகியவற்றை பா.ஜ., கைப்பற்றியது. மற்ற மண்டலங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு மாறிய பவன் ஷெராவத், சுகந்தா ஆகியோர் முறையே நரேலா, மத்திய மண்டலங்களின் தலைவர் பதவியை வென்றனர்.
சிவில் லைன்ஸ் மண்டலத்தில் கடும் போட்டி நிலவியது. தலா ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மூன்று பதவிகளையும் பா.ஜ., வென்றது.
வடக்கு டில்லியின் முன்னாள் மேயரும், எம்.சி.டி.,யின் பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவருமான ராஜா இக்பால் சிங், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரமிலா குப்தாவை தோற்கடித்தார்.
ஒன்பது கவுன்சிலர்களைக் கொண்ட காங்கிரஸ், ஷாதாரா வடக்கு மண்டலத்தில் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்களுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஆனால் இந்த மண்டலத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது.
கிழக்கு டில்லியின் முன்னாள் மேயர் நீமா பகத் ஷாதாரா, தெற்கு மண்டலத்திலிருந்து நிலைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது.