ADDED : செப் 05, 2024 03:57 AM

மாண்டியா மாவட்டம் 'சர்க்கரை நாடு' என, அழைக்கப்படுகிறது. இங்கு கரும்பு அதிகம் விளைவது, சர்க்கரை ஆலைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதே, இதற்கு காரணம். இம்மாவட்டத்தில், சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமில்லை. இங்கு தான் உலக பிரசித்தி பெற்ற கே.ஆர்.எஸ்., அணை, வண்ண, வண்ண பூக்கள் நிறைந்த பிருந்தாவனம் உள்ளது.
மாண்டியாவின் சுற்றுலா தலங்களில் தொன்னுாரும் ஒன்றாகும். தொன்னுார் என்ற பெயரை கேட்டாலே, ஸ்படிகம் வெண்மையான தண்ணீர் பாயும் முத்தினகெரே ஏரி, அதை சுற்றியுள்ள கோவில்கள், சொர்க்கத்தை கண் முன்னே கொண்டு வரும் இயற்கை எழில் சட்டென நினைவுக்கு வரும்.
மன அழுத்தத்தில் உள்ளவர்கள், மன அமைதியை விரும்புவோர் தொன்னுாருக்கு வந்து, இயற்கையின் மடியில் தவழ்ந்து விட்டு, கோவில்களை தரிசனம் செய்து கொண்டு, வீடு திரும்புவர்.
புதுமண தம்பதியர்
காதலர்கள், புதுமண தம்பதியர் அதிகம் வருவது வழக்கம். மாண்டியாவில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
தொன்னுாருக்கு வரும் சுற்றுலா பயணியர், விசாலமான ஏரியை பார்க்கின்றனர். ஏரிக்கரையில் அமர்ந்து சிறிது நேரம் பொழுது போக்குகின்றனர். அற்புதமான இந்த ஏரியை 'முத்து ஏரி' என, அழைக்கின்றனர்.
ஏரி எப்போது உருவானது என்பதற்கு, அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஹொய்சாலர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஏரியை பார்த்து விட்டு, முன்னோக்கி நடந்தால் மேலிருந்து கீழே பாயும் நீருற்றை காணலாம். இதில் தலை காட்டி நீராடினால், முன் ஜென்ம பாவங்கள் நீங்கும். நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல, பல மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை செடிகளை கடந்து வருவதால், நீருற்றில் குளித்தால் சரும நோய் மாயமாகி, சருமம் பட்டு போன்று ஜொலிக்கும் என்பது, மக்களின் நம்பிக்கை. எனவே தொன்னுார் ஏரி புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.
சிவாலயம்
ஹொய்சாளா மன்னர் விஷ்ணுவர்த்தனின் தாயார் மஹாதேவி, இங்கு துப்பலேஸ்வரா என்ற பெயரில் சிவாலயத்தை கட்டினாராம். விஷ்ணுவர்த்தன் இளவரசனாக இருந்த போது, தொன்னுாரை, அக்ரஹாரமாக மாற்றினார். இவர் கட்டிய ஐந்து கோவில்களில் தொன்னுாரில் உள்ள லட்சுமி நாராயணர் கோவிலும் ஒன்றாகும்.
ராமானுஜாச்சார்யர், மன்னர் விஷ்ணுவர்த்தனை சந்தித்து, இவரை ஜெயின் மதத்திலிருந்து, வைஷ்ணவ மதத்துக்கு மாற்றியதாக வரலாறு கூறுகிறது.
தொன்னுாரில் கோவில்கள் மட்டுமின்றி, ஹிந்து, முஸ்லிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் ஷாஹ சலா மசூத் தர்ஹாவும் உள்ளது. இது 1358ல் கட்டப்பட்டதாகும். தர்ஹா கட்டடத்துக்கு, கோவிலின் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏரி அருகில் உள்ள மலைகள் டிரெக்கிங் பிரியர்களுக்காகவே உருவானதை போன்றுள்ளன. மலையின் மேற்கு பகுதியில் தென்படும் இயற்கை காட்சிகள், நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
கர்நாடகாவில் உள்ள ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய ஏரி என்ற பெருமை, தொன்னுார் ஏரிக்கு உள்ளது.
தற்போது மாண்டியாவில் பரவலாக மழை பெய்வதால், ஏரி நிரம்பி கடல் போன்று தோற்றம் அளிக்கிறது.
- நமது நிருபர் -