ADDED : ஏப் 15, 2024 04:10 AM
பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் நெருங்கிய ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
ராம்நகரின் கனகபுராவை சேர்ந்தவர் கெம்பராஜு. தொழில் அதிபரான இவர் கிரானைட் ஆலை, கல்குவாரி நடத்தி வருகிறார். துணை முதல்வர் சிவகுமார், அவரது சகோதரர் எம்.பி., சுரேஷின் தீவிர ஆதரவாளர்.
பெங்களூரு கனகபுரா சாலை வஜ்ரா கிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் கெம்பராஜு வசிக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, கெம்பராஜு மீது வருமான வரி துறைக்கு, புகார் சென்றது.
இதையடுத்து நேற்று காலை அவரது வீடு, அலுவலகம், கல்குவாரி, கிரானைட் ஆலைகளில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்று உள்ளனர்.
சிவகுமார் மீதும் வருமானத்திற்கு அதிகமாக, சொத்து சேர்த்த வழக்கு உள்ளது. சி.பி.ஐ., நடத்திய விசாரணைக்கு அளித்த அனுமதியை, கர்நாடக அரசு திரும்ப பெற்றது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது.
விசாரணை அமைப்புகள் எனக்கும், எனது நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களுக்கும் தொல்லை கொடுப்பதாக, சிவகுமார் குற்றச்சாட்டி வரும் நிலையில், அவரது நெருங்கிய ஆதரவாளர் வீட்டில், வருமான வரி சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

