ADDED : ஆக 27, 2024 04:39 AM

ஷிவமொகா : பிரசித்தி பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியை பார்க்க வரும் சுற்றுலா பயணியருக்கு நுழைவுக் கட்டணம், வாகனங்கள் நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணியர், வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஷிவமொகா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி. பருவமழை காலத்தில் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை பார்க்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
ஜோக் நீர்வீழ்ச்சியை பார்க்க நுழைவுக் கட்டணமும்; வாகனங்கள் நிறுத்த கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, 30 முதல் 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி, சுற்றுலா பயணியருக்கு, ஜோக் நீர்வீழ்ச்சி மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி அளித்துள்ளது.
முன்னர், 10 ரூபாயாக இருந்த நுழைவுக் கட்டணம், தற்போது 20 ரூபாயாகவும்; இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னர், ஜோக் நீர்வீழ்ச்சியை பல மணி நேரம் பார்த்து ரசிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. இப்போது, இரண்டு மணி நேரம் மட்டுமே ஜோக் நீர்வீழ்ச்சியை காணலாம். இத்தகைய விதிகள், சுற்றுலா பயணியருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்து சுற்றுலா பயணியர் கூறியதாவது:
ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்தி, கட்டணம் வசூலித்தாலும் பரவாயில்லை.
ஆனால், நீர்வீழ்ச்சியை முழுதுமாக மேம்படுத்தாமல், கட்டணத்தை அதிகரித்து, விலை பட்டியலும் வைக்கப்பட்டு உள்ளது எந்த வகையில் நியாயம். மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழை, நடுத்தர மக்களின் சார்பாக, எங்களின் வேண்டுகோளை ஏற்று, பேலுார் எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணா, மாவட்ட கலெக்டரிடம் பேசி, கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.