பி.எம்.டி.சி.,யின் 'ஏசி' பஸ்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு
பி.எம்.டி.சி.,யின் 'ஏசி' பஸ்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : மே 10, 2024 10:50 PM

பெங்களூரு : வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பி.எம்.டி.சி., 'ஏசி' பஸ்களில் பயணிக்கும் பயணியரின் எண்ணிக்கை மூன்று மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பி.எம்.டி.சி., நிர்வாகத்தின் கீழ், 6,202 சாதாரண பஸ்களும், 755 'ஏசி வால்வோ' பஸ்கள் பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி சாதாரண பஸ்களில் 25 லட்சம் பயணியரும், 'ஏசி' பஸ்களில் 3 லட்சம் பயணியரும் பயணித்து வருகின்றனர்.
நடப்பாண்டு பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் சாதாரண பஸ்களில் பயணித்து வந்த மென் பொறியாளர்கள் பலர், தற்போது 'ஏசி' பஸ்களில் பயணிக்க துவங்கி உள்ளனர்.
மென்பொருள் பயணி ஒருவர் கூறியதாவது:
என் அலுவலகத்துக்கு செல்ல, அந்நேரத்தில் எந்த பஸ் வருகிறதோ அதில் ஏறி சென்று கொண்டிருந்தேன். இந்நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
வெயில் அதிகமாகி, பஸ்களில் பயணிக்கும் பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் வியர்த்து கொட்டி, ஒருவருடன் ஒருவர் உரசி எரிச்சலை ஏற்படுத்தியது.
எனவே தான் 'ஏசி' பஸ்களில் பயணிக்க துவங்கினேன். இந்த பஸ்களில் கூட்டமும் அவ்வளவாக இருக்காது. பயணியர் எண்ணிக்கை அதிகரித்தாலும், வியர்க்காது. தற்போது ஊருக்கோ, வெளி மாவட்டங்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்றாலும் ஏசி பஸ்சில் பயணிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பி.எம்.டி.சி., சாதாரண பஸ்களில் தினசரி 25 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ஜனவரி வரை ஏசி பஸ்களில் 3 லட்சம் பயணியர் பயணித்தனர். வெயில் காலம் அதிகரிப்புக்கு பின், ஏசி பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை, 3.30 லட்சமாக அதிகரித்து உள்ளது. இதனால், ஏசி பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.