பெலகாவி விமான நிலையத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு
பெலகாவி விமான நிலையத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:01 AM
பெலகாவி : கர்நாடகாவின் பெங்களூரு, மங்களூரு, பெலகாவி, ஹூப்பள்ளி, ஷிவமொகா, மைசூரு ஆகிய விமான நிலையங்களில், அதிகமான பயணியர் வருவது பெங்களூரு மற்றும் மங்களூரு விமான நிலையங்கள் தான்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், பெலகாவி விமான நிலையத்தில், பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, பெலகாவி விமான நிலைய ஆணைய இயக்குனர் தியாகராஜன் கூறியதாவது:
முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, பெலகாவி விமான நிலையத்தின் பயணியர் எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 64.1 சதவீதம் அதிகரித்துள்ளது. பெலகாவி விமான நிலையத்தில், பயணியர் நெருக்கடி உருவாகிறது. இதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.
கடந்த 2023 ஏப்ரலில், விமான நிலையம் வழியாக 18,922 பேர் பயணம் செய்தனர். நடப்பாண்டு ஏப்ரலில் 31,060 பயணியர் பயணம் செய்தனர். பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க, இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. பெலகாவி - டில்லி இடையே, இண்டிகோ விமானம் அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபடுவது பயணியரை ஊக்கப்படுத்துகிறது.
மும்பை வழித்தடத்தில் இயங்கும் ஸ்டார் ஏர் நிறுவனத்தின் எம்பரர் 175 விமானத்துடன், 50 இருக்கைகள் கொண்ட எம்பரர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது. பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க, இதுவும் ஒரு காரணமாகும்.
பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், வளர்ச்சி அடைகிறது. நடப்பாண்டு ஏப்ரலில் 34 லட்சத்து 21 ஆயிரத்து 997 பயணியருடன், 6.7 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் 32 லட்சத்து 6 ஆயிரத்து 356 பேர் பயணம் செய்தனர்.
இவ்வாறு கூறினார்.