இடுக்கிக்கு கோடை கால சுற்றுலா; பயணிகள் வருகை அதிகரிப்பு
இடுக்கிக்கு கோடை கால சுற்றுலா; பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : மே 13, 2024 07:40 AM

மூணாறு : இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கடந்த ஏப்ரலில் மாவட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு 3.40 லட்சம் பயணிகள் வருகை தந்தனர்.
இம்மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, வாகமண் உட்பட பல்வேறு முக்கிய சுற்றுலா பகுதிகள் உள்ளன.
இங்கு கடந்தாண்டை விட இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கடந்தாண்டு ஏப்ரலில் சுற்றுலாப் பகுதிக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்து 118 பயணிகள் வந்தநிலையில் இந்தாண்டு ஏப்ரலில் பயணிகள் வருகை 3 லட்சத்து 40 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.
மிகவும் கூடுதலாக வாகமண் அட்வஞ்சர் பூங்காவுக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 314 பயணிகள் சென்றனர்.
மாவட்டச் சுற்றுலா துறைக்குச் சொந்தமான சுற்றுலாப் பகுதிகளுக்கு கடந்த ஏப்ரலில் சென்ற பயணிகளின் எண்ணிக்கை:
மாட்டுபட்டி அணை 16,035, ராமக்கல் மேடு 20,280, அருவிகுழி 1186, ஸ்ரீ நாராயணபுரம் 7457, வாகமண் அட்வஞ்சர் பூங்கா 1,20,314, வாகமண் மலை குன்று 83,256, பாஞ்சாலிமேடு 16,338, இடுக்கி ஹில் வியூ பூங்கா 11,986, மூணாறு தாவரவியல் பூங்கா 6280.
கண்காட்சி நிறைவு:
மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் மே ஒன்றில் துவங்கிய மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வரை 50 ஆயிரம் பயணிகள் மலர் கண்காட்சியை ரசித்தனர்.