ADDED : ஜூலை 25, 2024 10:58 PM
பெங்களூரு: பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலையை உயர்த்திய காங்கிரஸ் அரசு, குடிநீர் கட்டணத்தை உயர்த்த முற்பட்டதை, பா.ஜ., கண்டித்துள்ளது.
'கடந்த 12 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என, துணை முதல்வர் சிவகுமார் நேற்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ., ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பா.ஜ., குறிப்பிட்டுள்ளதாவது:
கர்நாடகாவில் ஏற்கனவே, பெட்ரோல், டீசல் உட்பட, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். இப்போது குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க, காங்கிரஸ் அரசு முற்பட்டுள்ளது.
நாளுக்கொரு பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களுக்கு சுமையை ஏற்றி வைக்கிறது. காங்., அரசில் மக்கள் பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். எனவே குடிநீர் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும். மாநிலத்தின் கருவூலத்தை கொள்ளையடித்து, இப்போது செலவு சுமையை மக்கள் மீது சுமத்த தயாராகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

