ADDED : மார் 28, 2024 10:35 PM
பெங்களூரு : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சில தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அதிகரிப்பதால், காங்கிரஸ் மேலிடம் கவலை அடைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். முதல்கட்டமாக ஏழு தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், கோலார், பல்லாரி, சாம்ராஜ் நகர், சிக்கபல்லாப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்க முடியாமல் அக்கட்சியின் மேலிடம் திணறுகிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் கோஷ்டி பூசல் உள்ளது.
கோலாரில் அமைச்சர் முனியப்பா மகன் சிக்கபெத்தண்ணாவுக்கு 'சீட்' கொடுக்க, அமைச்சர், மூன்று எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு எம்.எல்.சி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி சீட் கொடுத்தால், ராஜினாமா செய்வோம் என்று மிரட்டலும் விடுத்தனர். அவர்களை முதல்வர் சமாதானம் செய்தார்.
இப்போது சிக்கபல்லாப்பூரில் பிரச்னை கிளம்பி உள்ளது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரக் ஷா ராமையாவுக்கு சீட் கொடுக்க மேலிடம் நினைத்திருந்தது. கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ரெட்டி, குட்டையை குழப்புகிறார். “எனக்கு சீட் வேண்டும்; இல்லாவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன்,” என மிரட்டுகிறார்.
பல்லாரியிலும் இதே நிலை தான். சண்டூர் எம்.எல்.ஏ., துக்காராம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகிறது. ஆனால், அமைச்சர் நாகேந்திரா தன் சகோதரர் வெங்கடேஷுக்கு சீட் வாங்கி தர நினைக்கிறார்.
சாம்ராஜ் நகரில் அமைச்சர் மஹாதேவப்பா மகன், சுனில் போசுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளிலும் அதிகரிக்கும் அதிருப்தியால், யாருக்கு சீட் தருவது என்று கட்சி மேலிடம் குழப்பத்தில் உள்ளது.
ஒரு கண்ணை பாதுகாக்க, இன்னொரு கண்ணை இழக்க முடியுமா என்ற கவலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் உள்ளனர்.

