நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டாதீங்க: மத்திய அரசை சாடிய சித்தராமையா
நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டாதீங்க: மத்திய அரசை சாடிய சித்தராமையா
ADDED : ஆக 15, 2024 12:21 PM

புதுடில்லி: 'மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது' என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் சுதந்திர தின விழாவில், சித்தராமையா பேசியதாவது: மாநிலங்களின் வளர்ச்சிக்கு நியாயமான மானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல், வாக்காளர்களின் அரசியல் புத்திசாலித் தனத்தை பிரதிபலிக்கிறது. ஜனநாயகம் யாருடைய கைப்பாவையாக இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது.
அரசியல் ஜனநாயகம்
அரசியலமைப்புச் சட்டங்களைப் புறக்கணிப்பதன் மூலம், மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய நிதிப் பங்கைத் தாமதப்படுத்தும் போக்கு உள்ளது. இது மக்களின் நலன் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு உரிய பங்கைப் பெற சட்டப்பூர்வ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் எண்ணம் கொண்டவர்கள், அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். சமூக ஜனநாயகம் இல்லாமல், அரசியல் ஜனநாயகம் வாழ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.