ADDED : மார் 23, 2024 01:22 AM

திம்பு, ''இந்தியா - பூடான் மக்களுக்கு இடையே உள்ள தொடர்பு, இரு நாடுகளின் உறவை தனித்துவமாக்குகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தெற்காசிய நாடான பூடானுக்கு, இரு நாள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். பாரோ விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பூடானின் மிக உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் வழங்கி கவுரவித்தார்.
இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுஉள்ளார்.
இதன் பின் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பூடானின் உயரிய விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதை, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பூடான் மக்களின் இதயங்களில் இந்தியா வாழ்கிறது.
இந்தியா - பூடான் மக்களுக்கு இடையே உள்ள தொடர்பு, இரு நாடுகளின் உறவை தனித்துவமாக்குகிறது. பூடான் மற்றும் இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, ஒரே மாதிரியானவை.
நாங்கள் வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடிவு செய்து உள்ளோம்.
அதே போல், 2034-க்குள், 'உயர் வருமானம்' கொண்ட நாடாக மாற பூடான் முடிவு செய்துள்ளது. பூடானின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் இணைப்பு, விண்வெளி, விவசாயம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே ரயில் இணைப்புகளை நிறுவுவது தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

