ADDED : ஆக 04, 2024 12:50 AM

புதுடில்லி: ''இந்தியா தற்போது உணவு மிகை நாடாக உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் உலக நாடுகளுக்கு தீர்வுகளை அளிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
வேளாண் பொருளாதார நிபுணர்களின், 32வது சர்வதேச மாநாடு டில்லியில் நடக்கிறது.
நம் நாட்டில், 65 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இந்த மாநாட்டில், 70 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை நேற்று துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்த மாநாடு இந்தியாவில், 65 ஆண்டுகளுக்கு முன் நடந்தபோது அப்போதுதான் சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளை கடந்திருந்தோம்.
அப்போது நம் நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்தன. ஆனால், தற்போது நாம் உணவு மிகை நாடாக உள்ளோம்.
இந்த அனுபவத்தை உலக நாடுகளுக்கு அளித்து, அவற்றின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை இந்தியா அளிக்கிறது.
பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை போன்றவற்றில் இரண்டாவது இடத்தில் உள்ளோம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
அதனால் தான், இந்த துறையில் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எந்த ஒரு பருவநிலையையும் தாங்கக் கூடிய, 1,900 வகையான பயிர் வகைகளை, 10 ஆண்டுகளில் உருவாக்கிஉள்ளோம்.
குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தி, ரசாயனம் அல்லாத இயற்கை வேளாண்மை ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.