அமெரிக்காவில் சாலை விபத்து: இந்திய தம்பதி, மகள் பலி
அமெரிக்காவில் சாலை விபத்து: இந்திய தம்பதி, மகள் பலி
ADDED : ஆக 19, 2024 01:20 AM

டெக்சாஸ், ஆக. 19-
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில், இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லியாண்டர் என்ற பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் மணி, 45, என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பிரதீபா, 40. இவர்களுக்கு, 17 வயதில் ஆண்ட்ரில் என்ற மகளும், 14 வயதில் ஆதிரியன் என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில், வடக்கு டெக்சாசில் உள்ள கல்லுாரிக்கு, மகள் ஆண்ட்ரிலை, அரவிந்தும், பிரதீபாவும் காரில் அழைத்துச் சென்றனர். லாம்பாஸ் கவுண்டி என்ற பகுதி அருகே, எதிரே அதிவேகமாக வந்த கார், இவர்கள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் அரவிந்த், பிரதீபா, ஆண்ட்ரில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து, கடந்த 14ம் தேதி அதிகாலை 5:45 மணி அளவில் நடந்துள்ளது.
பெற்றோருடன் காரில் செல்லாததால், ஆதிரியன் மட்டும் உயிர் பிழைத்தார். பெற்றோர், சகோதரியை இழந்து தவிக்கும் ஆதிரியனுக்கு உதவுவதற்காக, அங்குள்ள தன்னார்வலர்கள் இணையதளம் வாயிலாக நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை 5.87 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

