மாலத்தீவில் இருந்து 2ம் கட்டமாக வெளியேறிய இந்திய படைகள்
மாலத்தீவில் இருந்து 2ம் கட்டமாக வெளியேறிய இந்திய படைகள்
ADDED : ஏப் 15, 2024 12:23 AM

மாலே: ''என் கோரிக்கையின்படி, மாலத்தீவில் இருந்து இரண்டாவது கட்டமாக இந்திய படைகள் வெளியேறி உள்ளன,'' என, அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடான மாலத்தீவில், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு வெற்றி பெற்றார்.
சீன ஆதரவாளரான இவர், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். இதனால், இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
மாலத்தீவில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நம் ராணுவப் படைகளை வெளியேறும்படி, பதவியேற்றது முதலாக அதிபர் முகமது முய்சு வலியுறுத்தி வருகிறார்.
இந்தியா - மாலத்தீவு இடையேயான ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக மாலத்தீவில் இருந்த நம் ராணுவத்தைச் சேர்ந்த 26 வீரர்கள் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் வெளியேறினர்.
இந்நிலையில், வரும் 21ம் தேதி மாலத்தீவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அதிபர் முகமது முய்சு கூறியதாவது:
இந்தியாவின் ராணுவப் படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என, நான் துவக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். என் கோரிக்கையின்படி, கடந்த மாதம் அந்நாட்டின் படைகளைச் சேர்ந்த முதல் குழுவினர் வெளியேறினர்.
கடந்த 9ம் தேதி, இரண்டாவது குழுவினரும் மாலத்தீவில் இருந்து வெளியேறி விட்டனர். இன்னும் ஒரேயொரு குழுவினர் தான் உள்ளனர்; அவர்களும் மே 10ம் தேதிக்குள் வெளியேறி விடுவர். எங்கள் மீது, வெளிநாடுகள் அதிகாரம் செலுத்துவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவில் இருந்து வெளியேறிய இரண்டாவது இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
