சவால்கள் அதிகம்; சாதித்தவையும் அதிகம்; சக்தி காந்ததாஸ் பெருமிதம்!
சவால்கள் அதிகம்; சாதித்தவையும் அதிகம்; சக்தி காந்ததாஸ் பெருமிதம்!
ADDED : ஆக 21, 2024 09:29 AM

புதுடில்லி: 'கோவிட் தொற்றுநோய், உக்ரைனில் போர், பல்வேறு நாடுகளில் நிலவும் பதட்டங்கள் உட்பட கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலகுக்கே முன்னுதாரணமாக உள்ளது,' என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு, சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டி: கடந்த ஆறு வருடங்களாக பொருளாதார வளர்ச்சி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கோவிட் காலத்தில் சரிந்த இந்திய பொருளாதாரம் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வேகமாக மீண்டெழுந்தது. போர் காரணமாக ரஷ்யா மீதான பல்வேறு நாடுகளின் பொருளாதாரத் தடையால் வர்த்தக ரீதியில் பல்வேறு சவால்கள் உருவானது.
நெருக்கடி
சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. கோவிட் காலத்தில், பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, நெருக்கடியிலும் நிதித் துறை சிறப்பாக செயல்பட்டது. ரிசர்வ் வங்கியும் அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது.
பணவீக்கம்
இன்று பணவீக்கம் கட்டுக்குள் வருகிறது. ஆனால் 4 சதவீதத்தை எட்டுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். நிதித்துறை இன்று முன்பை விட, சிறப்பானதாகவும், மீள்தன்மையுடனும் உள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

