இந்துார் பெண்ணுக்கு 'பாம்பே குரூப்' ரத்தம் தேவை 400 கி.மீ., பயணித்து தானம் அளித்த இளைஞர்
இந்துார் பெண்ணுக்கு 'பாம்பே குரூப்' ரத்தம் தேவை 400 கி.மீ., பயணித்து தானம் அளித்த இளைஞர்
ADDED : மே 30, 2024 12:35 AM
இந்துார் :அரிதிலும் அரிதாக கருதப்படும், 'பாம்பே குரூப்' ரத்தம் தேவைப்பட்ட பெண்ணுக்கு, மஹாராஷ்டிராவின் ஷிர்டியில் இருந்து இந்துாருக்கு, 400 கி.மீ., பயணித்து, இளைஞர் ஒருவர் ரத்த தானம் அளித்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்துாரைச் சேர்ந்த பெண்ணுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவருடைய ரத்த வகை, 'ஓ பாசிடிவ்' என்று கருதி, அறுவை சிகிச்சையின்போது, ஓ பாசிடிவ் ரத்தம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இந்துாரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், அவருக்கு மிகவும் அரிதான பாம்பே குரூப் ரத்த வகை இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வகை ரத்தத்தை பெறுவதற்கான முயற்சிகள் நடந்தன.
வாட்ஸாப் வாயிலாக இதை தெரிந்து கொண்ட, மஹாராஷ்டிர மாநிலம் ஷிர்டியைச் சேர்ந்த, அலங்கார மலர்களை விற்கும் ரவிந்திர அஸ்தேகர், 36, நண்பரின் உதவியுடன் காரில் பயணித்தார். 400 கி.மீ., துார பயணத்துக்குப் பின், அவரிடம் இருந்து, பாம்பே குரூப் ரத்தம் பெறப்பட்டு, அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.
சரியான நேரத்தில் சரியான ரத்தம் கிடைத்ததால், அந்த பெண் உயிர் தப்பினார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தனக்கு மிகவும் அரிதான பாம்பே குரூப் ரத்தம் இருப்பதை தெரிந்து கொண்ட அஸ்தேகர், 10 ஆண்டுகளில் எட்டுமுறை, தேவைப்படுவோருக்கு தானமாக அளித்துள்ளதாக கூறிஉள்ளார்.
'தவறான ரத்தம் கொடுக்கப்பட்டதால், வழக்கமாக, ஒரு டெசிலிட்டரில், 12 முதல் 15 வரை இருக்க வேண்டிய ஹிமோகுளோபின், இந்த பெண்ணுக்கு, நான்காக குறைந்து விட்டது. மிகவும் சிக்கலான கட்டத்தில் அவர் இருந்தார்.
'அவருடைய சிறுநீரகமும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. சரியான நேரத்தில் ரத்தம் கிடைத்ததால், அவர் உயிர் தப்பியதுடன், நலமாகி வருகிறார்' என, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறினர்.
அந்தப் பெண்ணுக்கு தேவைப்பட்ட, நான்கு யூனிட் ரத்தத்தில், இரண்டு யூனிட்கள், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து விமானம் வாயிலாக வரவழைக்கப்பட்டது. இந்துாரிலேயே உள்ள அவருடைய சகோதரி, ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தார்.