கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் திஹார் சிறை நிர்வாகம் தகவல்
கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் திஹார் சிறை நிர்வாகம் தகவல்
ADDED : ஏப் 24, 2024 01:28 AM
புதுடில்லி, சர்க்கரை அளவு அதிகரித்ததை அடுத்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குறைந்த அளவிலான இன்சுலின் போடப்பட்டதாக திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டில்லி மதுபானக் கொள்கை ஊழலில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஏப்., 1 முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சர்க்கரை அளவு அதிகரித்து வருவதாகவும், இன்சுலின் தேவைப்படுவதாகவும் தொடர்ந்து கூறி வந்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலையை கெடுக்க பா.ஜ., சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் ஆம் ஆத்மி தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.
இதையடுத்து, திஹார் சிறை நிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி, அரவிந்த் கெஜ்ரிவாலுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அவரது சர்க்கரை அளவு அதிகரித்தால், இன்சுலின் கொடுக்கும்படி, திஹார் சிறையிலுள்ள டாக்டர்களுக்கு, எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நேற்று முன்தினம் இரவு, குறைந்த அளவிலான இன்சுலின் இரு முறை கொடுக்கப்படதாக, திஹார் சிறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அமைச்சர் ஆதிஷி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஹனுமன் ஜெயந்தியையொட்டி தங்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை, மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நேற்று உத்தரவிட்டார்.

