உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை: முதல்வர்
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை: முதல்வர்
ADDED : மார் 06, 2025 10:54 PM
வர்த்தகர்களின் கவலையை போக்கும் வகையிலும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையும் வரவிருக்கும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம் மற்றும் வணிக நட்பு கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, முதல்வர் ரேகா குப்தா உறுதி அளித்தார்.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி துவங்குகிறது. நிதித்துறை பொறுப்பை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் ரேகா குப்தா, தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடனும் பல்வேறு தரப்பினருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நகர் முழுவதும் உள்ள வணிகர்கள், வணிக அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வியாபாரிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை முதல்வர் குறிப்பெடுத்துக் கொண்டார்.
பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
போதிய உள்கட்டமைப்பு, மோசமான சுகாதாரம் உள்ளிட்ட காரணங்களால் வணிகர்களும் சிறு வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய அரசின் அலட்சியம் காரணமாக உண்மையான வளர்ச்சி ஏற்படவில்லை.
முந்தைய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் நடைமுறைக்கு மாறான கொள்கைகளால் சாலைகள், வடிகால் அமைப்புகள் மோசமான நிலையில் உள்ளன. முக்கிய சந்தைகளில் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. வணிகர்கள் சிரமப்பட நேரிட்டது. இந்த நிலை மாறும்.
வணிகர்களின் கோரிக்கைகளை இந்த அரசு கனிவுடன் பரிசீலிக்கும். இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாந்தினி சவுக், கரோல் பாக், லஜ்பத் நகர் உள்ளிட்ட வணிக மையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வலியை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே முந்தைய ஆம் ஆத்மி அரசு கவனம் செலுத்தியது. ஆனால் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
வர்த்தகர்களின் கவலையை போக்கும் வகையிலும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையும் வரவிருக்கும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம் மற்றும் வணிக நட்பு கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வணிகர்கள் பட்டியலிட்ட 11 அம்சங்கள்
தொழில் மேம்பாட்டு மாநாடு
நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநாட்டில் மாநில தொழில் துறை அமைச்சர்
மஞ்சிந்தர் சிர்சா பங்கேற்றார். இந்த நிகழ்வில் டில்லியின் 56 தொழில்துறை
பகுதிகளிலிருந்தும் 300 சந்தை பிரதிநிதிகள், தொழில் சங்கங்கள் பங்கேற்றன.
அமைச்சரிடம்
பட்ஜெட்டில் வணிகர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய 11 அம்ச கோரிக்கை மனுவை வணிக
மற்றும் தொழில்துறை சபை தலைவர் பிரிஜேஷ் கோயல் அளித்தார்.
தொழில்துறை
பகுதிகளில் மின்சாரக் கட்டணங்களை சீரமைக்க வேண்டியதன் அவசியம், கிடங்குக்
கொள்கையை அறிமுகப்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்க ஒற்றைச் சாளர
அமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட 11 அம்சங்கள் குறித்து அமைச்சரிடம் வணிகர்கள்
விளக்கினர்.
- நமது நிருபர் -