UPDATED : மார் 29, 2024 11:49 AM
ADDED : மார் 29, 2024 06:41 AM

பெங்களூரு : கர்நாடகாவில், முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.
லோக்சபா தேர்தல், கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகின்றன.
முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கியது.
144 தடை உத்தரவு
பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட பெங்., வடக்கு தொகுதி தேர்தல் அலுவலகம், கே.ஜி., சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நீதிமன்ற வளாகத்திலும்; பெங்., சென்ட்ரல் தொகுதி தேர்தல் அலுவலகம், மாநகராட்சி தலைமை அலுவலகத்திலும்; பெங்., தெற்கு தொகுதி அலுவலகம், ஜெயநகரில் உள்ள தெற்கு மண்டல கமிஷனர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 14 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான நேற்று காலை 11:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடந்தது.
முன்னெச்சரிக்கையாக, ஏப்ரல் 8ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை அனைத்து தேர்தல் அலுவலகங்களை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்., ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ், ஏற்கனவே மூன்று முறை எம்.பி.,யாக இருந்தவர். தற்போது, 4வது முறையாக போட்டியிடுகிறார்.
தன் அண்ணனும், துணை முதல்வருமான சிவகுமார், அண்ணி உஷா ஆகியோரின் கால்களில் விழுந்து நேற்று காலை சுரேஷ் ஆசி பெற்றார். பிறகு பல்வேறு கோவில்களிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
பின், திறந்த வாகனத்தில், அமைச்சர்கள், ஏராளமான ஆதரவாளர்களுடன் சென்று, தேர்தல் அதிகாரியும், ராம்நகர் கலெக்டருமான அவிநாஷ் மேனனிடம், பகல் 12:37 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
அமைச்சர் ராமலிங்கரெட்டி, எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, சிவண்ணா, மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் கங்காதர் உடன் இருந்தனர்.
இதுபோன்று, ஹாசன் ம.ஜ.த., வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, தன் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவிடம் ஆசி பெற்று, கலெக்டர் சத்யபாமாவிடம் நேற்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது தந்தை ரேவண்ணா, எம்.எல்.ஏ.,க்கள் ஸ்வரூப், மஞ்சு ஆகியோர் உடனிருந்தனர்.
தற்போதைக்கு அமர்க்களம் இல்லாமல் மனு தாக்கல் செய்தார். அடுத்த வாரம், ம.ஜ.த., பா.ஜ., தலைவர்களுடன் பேரணியாக வந்து மீண்டும் ஒருமுறை மனு தாக்கல் செய்ய பிரஜ்வல் திட்டமிட்டு உள்ளார்.
25 பேர்
தட்சிண கன்னடா பா.ஜ., வேட்பாளர் பிரிஜேஸ் சவுடா, கலெக்டர் முல்லை முகிலனிடம் பெயரளவுக்கு மனு தாக்கல் செய்தார். அவரும் மீண்டும் ஒருமுறை தாக்கல் செய்ய உள்ளார்.
வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாளில், காங்கிரஸ், பா.ஜ., ம.ஜ.த., கட்சிகளில் தலா ஒரு வேட்பாளரும் உட்பட 14 தொகுதிகளில், 2 பெண்கள் உட்பட மொத்தம் 25 பேர் நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஏப்ரல் 4ம் தேதி, மனு தாக்கலுக்கு கடைசி நாள்.

