கைதி தாக்கி வார்டன் காயம் மருத்துவமனையில் 'அட்மிட்'
கைதி தாக்கி வார்டன் காயம் மருத்துவமனையில் 'அட்மிட்'
ADDED : மே 29, 2024 04:34 AM

பெலகாவி, : பெலகாவி ஹிண்டல்கா சிறையில் விதிகளை கடைப்பிடிக்க கூறிய வார்டனை, சிறை கைதி ஒருவர் தாக்கியதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெலகாவி ஹிண்டல்கா சிறையில் இருந்தபடி, கைதி ஜெயேஷ் பூஜாரி, சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த, மஹாராஷ்டிராவின் நாக்பூர் போலீசார், ஜெயேஷை விசாரணைக்காக நாக்பூர் அழைத்துச் சென்றனர்.
பதிலளிக்காத வார்டன்
இந்நிலையில், குற்ற வழக்கில் தொடர்புள்ள ரோஹன் என்ற கைதி, ஹாசனில் இருந்து பெலகாவி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் தனக்கு உடல் நலம் சரியில்லை.
சிறையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று வார்டனிடம் கூறியுள்ளார். விதிமுறைப்படி அழைத்து செல்லப்படுவீர்கள் என வார்டன் பதில் கூறி உள்ளார்.
இதனால் ரோஹன் கோபம் அடைந்தார். நேற்று காலையில், அவ்வழியாக வந்த வார்டன் வினோத் லோகபூரை, சரமாரியாக தாக்கி உள்ளார். அவரை உதைத்தும் உள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்ட மற்ற போலீசார், அவரை மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வார்டன் வினோத் கூறுகையில், ''இதற்கு முன்னரும், நான்கைந்து கைதிகள் சேர்ந்து சிறை ஊழியரை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக, மேற்பார்வையாளரிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்முறையாவது மேற்பார்வையாளர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.
ரூ.10,000 'சம்திங்'
இச்சிறையில் அதிகாரிகளுக்கு 10,000 ரூபாய் 'சம்திங்' வழங்கினால், கைதி வெளியில் பேசுவதற்கு சாதாரண மொபைல் போனும்; 20,000 ரூபாய் வழங்கினால், 'ஆன்ட்ராய்டு போனும், அதற்கு மேல் வழங்கினால் சிறப்பு அறை, 'டிவி', படுக்கை, வெயிலில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்படும். இதை தட்டி கேட்கும் கைதிகள் தாக்கப்படுவர் என கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹிண்டல்கா சிறை வார்டன் வினோத் லோகபூர்.