சுற்றுலா பயணியரை இழுக்கும் ஐ.என்.எஸ்., அருங்காட்சியகம்
சுற்றுலா பயணியரை இழுக்கும் ஐ.என்.எஸ்., அருங்காட்சியகம்
ADDED : ஜூலை 31, 2024 11:58 PM

உத்தர கன்னடா மாவட்டத்தின் தலைநகரான கார்வாரில் உள்ளது ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை. இந்த கடற்கரையின் நுழைவாயில் பகுதியில் ஐ.என்.எஸ்., போர்க் கப்பல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
ஐ.என்.எஸ்., போர்க் கப்பல், 1971ம் ஆண்டு இந்தியா- - பாகிஸ்தான் போரில் பயன்பட்டது. கராச்சி மீது ஏவுகணைகளை வீசி பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது தான் இந்த கப்பல்.
இந்திய கடற்படையில் பல ஆண்டுகள் பணியாற்றி சேவையை நிறைவு செய்த பின், 2006ல் போர்க்கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த கப்பலில் குறியீட்டு பெயர் K94 ஆகும். 245 டன் எடை கொண்டது.
போர்க்கப்பல் அருங்காட்சியகத்தில் பல கலைப் பொருட்கள், கடல் சார்ந்த புகைப்படங்கள், கப்பலின் மாலுமிகள் பயன்படுத்திய உடைகள், ஏவுகணைகளின் நகல்கள் உள்ளன.
இந்த கப்பலுக்குள் இந்திய கடற்படை வரலாறு, இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் பற்றிய 15 நிமிட ஆவண படங்களும் திரையிடப்படுகின்றன. சூரிய அஸ்தமனத்தை கப்பலுக்குள் இருந்து பார்ப்பது பிரமிப்பாக இருக்கும். கப்பலுக்கு சென்று பார்வையிட, ஒரு நபருக்கு 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தினமும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 4:30 முதல் மாலை 6:00 மணி வரையும் போர்க்கப்பல் அருங்காட்சியகம் திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து கார்வார் 519 கி.மீ., துாரத்தில் உள்ளது. ரயில், பஸ் சேவையும் உள்ளது. விமானத்தில் செல்வோர் மங்களூரு அல்லது கோவா விமான நிலையம் சென்று அங்கிருந்து கார்வார் சென்றடையலாம்.
அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., போர்க்கப்பல்.
-- நமது நிருபர் --