ADDED : ஏப் 18, 2024 04:36 AM

ஹாசன், : ஹாசனில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், காங்கிரஸ் வேட்பாளரும் தங்கள் கட்சிக்குள் நடக்கும், 'உள்ளடி' வேலையால் கதிகலங்கி உள்ளனர்.
ஹாசன் லோக்சபா தொகுதியில் ஸ்ரவணபெலகொளா, அரசிகெரே, பேலுார், ஹாசன், ஹொளேநரசிபுரா, அரகலகூடு, சக்லேஸ்பூர் மற்றும் சிக்கமகளூரின் கடூர் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், நான்கில் ம.ஜ.த.,வும்; இரண்டில் பா.ஜ.; இரண்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
பிரஜ்வலுக்கு சிக்கல்
ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளரான பிரஜ்வல், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் ஸ்ரேயஷ் படேல் போட்டியிடுகிறார். இவர், தேவகவுடாவை 1999 லோக்சபா தேர்தலில் தோற்கடித்த புட்டசாமி கவுடாவின் பேரன்.
இந்த இரு வேட்பாளர்களும் வயது, படிப்பு, அரசியல் பின்புலம், சொத்து ஆகியவற்றில் சரிசமமாக உள்ளனர். காங்கிரசின் வாக்குறுதி திட்டத்தை மையப்படுத்தி ஸ்ரேயஷ் படேல் பிரசாரம் செய்து வருகிறார். பிரஜ்வல்லோ, மோடியை பிரதமராக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறார்.
கட்சி மேலிடம் அறிவுரை கூறிய பின்னரும், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜ.,வினர் சிலர் பிரசாரம் செய்ய முன்வரவில்லை.
பா.ஜ., மேலிடத்தில் தேவகவுடா நேரடியாக புகார் அளித்ததன் பலனாக, பிரீத்தம் கவுடா ஏனோ தானோவென்று பிரசாரம் செய்து வருகிறார். அவ்வப்போது ஹாசனில் பிரசாரம் செய்தாலும் கூட, தப்பித்தவறி பிரஜ்வலின் பெயரை குறிப்பிடுவதே இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் என்றே கூறி வருகிறார்.
காங்கிரசார் அதிருப்தி
இதுபோன்று, ம.ஜ.த.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து, அரசிகெரே எம்.எல்.ஏ.,வானவர் சிவலிங்கே கவுடா. ஹாசன் மாவட்டத்தில் இவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பாரம்பரிய காங்கிரசார் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்ட பொறுப்பு வகிப்பது, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணாவாக இருந்தாலும், சிவலிங்கே கவுடாவின் திட்டப்படியே அனைத்தும் நடக்கிறது.
ஸ்ரேயஷ் படேல் தேர்வும், அவரின் ஆலோசனைப்படியே நடந்தது. பிரசாரமும் அவர் தலைமையிலேயே நடப்பதால், பாரம்பரிய காங்கிரசார் எரிச்சல் அடைந்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவராம் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் முதல்வர் சித்தராமையா, அவரையும், சிவலிங்கே கவுடாவையும் சமாதானம் செய்து வைத்தார்.
இத்தேர்தல் இரு குடும்பங்களுக்குமான கவுரவ தேர்தலாக கருதப்படுகிறது. இரு கட்சியும் ஒருவர் மீது ஒருவர் வழக்கமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் விமான நிலைய வளர்ச்சி; மலை பகுதிகளில் ஏற்படும் வனப்பகுதி பிரச்னைகள்; பெரிய தொழிற்சாலைகளை நிறுவுதல்; நானேஹுன்டி நீர்ப்பாசன திட்டம் குறித்து இருவரும் மூச்சு விடுவதில்லை.
இரு கட்சியிலும், 'உள்ளடி' வேலைகள் நடப்பதால் வேட்பாளர்கள் கதிகலங்கி நிற்கின்றனர். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிரசாரம் செய்துவருகின்றனர்.

