ADDED : செப் 02, 2024 01:05 AM
பஹராயிச்: உத்தர பிரதேசத்தில், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை வேட்டையாடிய நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில், மேலும் இரண்டு ஓநாய்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்லை ஏற்படுத்தி வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் உள்ள பஹராயிச் மாவட்டத்தில் ஓநாய்கள் படையெடுத்ததை அடுத்து, அங்குள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில், ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரை ஓநாய்கள் கொன்றன. இதையடுத்து, 'ஆப்பரேஷன் பேடியா' என்ற நடவடிக்கை வாயிலாக கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் வனத் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், நான்கு ஓநாய்கள் பிடிபட்டன; இரண்டு ஓநாய்கள் தப்பியோடின. இவற்றைப் பிடிக்கும் முயற்சியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக தேடுதல் பணி நடந்து வருகிறது.
ஆனாலும், வனத்துறையினரின் கண்களின் மண்ணை துாவிவிட்டு ஓநாய்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஊருக்குள் ஓநாய்கள் உலவுவதை பார்த்த கிராம மக்கள், பீதியில் உறைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஓநாய்கள், 7 வயது சிறுமி உட்பட இருவரை நேற்று தாக்கின.
ஓநாய் தாக்குதலுக்கு உள்ளான குன்னுலால், இது குறித்து கூறுகையில், “அதிகாலை 4:00 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றேன். அங்கு இருட்டில் பதுங்கியிருந்த ஓநாய் என் மீது திடீரென பாய்ந்தது. அதன் வாயை நான் பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் அது என்னை கொன்றிருக்கும். உதவிக்கு பலரை அழைத்தேன். அவர்கள் வந்ததும் அது தப்பியோடியது,” என்றார்.
இதற்கிடையே, ஓநாய்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள வனத் துறையினர். விரைவில் அவற்றை பிடித்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.