ஜம்மு தாக்குதல் : மோடி தலைமையில் ஆலோசனை 50 பேரிடம் தீவிர விசாரணை
ஜம்மு தாக்குதல் : மோடி தலைமையில் ஆலோசனை 50 பேரிடம் தீவிர விசாரணை
ADDED : ஜூன் 14, 2024 02:29 AM
புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்த சில மணி நேரங்களில் 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்ற கடந்த 10ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு
இதில் நிலைதடுமாறிய பஸ், அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் ஒன்பது பேர் பலியாகினர்; 41 பேர் காயமடைந்தனர்.
அடுத்ததாக, ஜம்முவின் தோடா மாவட்ட குடியிருப்பு பகுதி, கதுவா மாவட்ட ராணுவ முகாம்களையும் பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், துணை ராணுவப் படை வீரர் ஒருவர் பலியானார்; இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் நடந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அது தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜம்மு --- காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
எதிர்ப்பு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், 'பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தினார்.
காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் தனித்தனியாக பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் நடந்த சில மணி நேரத்தில், பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, 50 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.