யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்பு
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்பு
ADDED : ஆக 08, 2024 01:26 AM

டாக்கா, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்க உள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி வகார் உஜ் ஜமான் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இதை எதிர்த்து, அங்குள்ள மாணவர்கள் கடந்த மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சட்டப்படி நடவடிக்கை
இதனால், ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால், நாட்டின் முக்கிய அடையாளங்கள், கோவில்கள், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
போர்க்களமாக மாறிய வங்கதேசத்தில், வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி ஷேக் ஹசீனாவுக்கு ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான் கெடு விதித்தார்.
இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து, பார்லிமென்ட்டை கலைக்க அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார்.
இதுகுறித்து போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், முப்படை தளபதிகள், மூத்த அதிகாரிகளுடன் அதிபர் ஷஹாபுதீன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, 2006ல் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிபர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவ ஜெனரல் வகார் உஜ் ஜமான் கூறுகையில், “இடைக்கால அரசு இன்று இரவு 8:00 மணிக்கு பதவியேற்கவுள்ளது. இடைக்கால அரசின் ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம்.
“நாடு முழுதும் நிலைமை கணிசமாக மேம்பட்டு வருவதால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும். கடந்த சில நாட்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
வன்முறை வேண்டாம்
ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் உள்ள முகமது யூனுஸ் பதவியேற்பதற்காக இன்று வங்கதேசம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த வெற்றியை சிறந்த முறையில் பயன்படுத்துவோம். அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருங்கள்.
வங்கதேசத்தை நாம் பாதுகாத்து, நமக்காகவும், நம் எதிர்கால சந்ததியினருக்காகவும் அற்புதமான நாடாக மாற்ற வேண்டும்.
எந்த அர்த்தமற்ற வன்முறையிலும் ஈடுபடுவதன் வாயிலாக அரிய வாய்ப்பை இழக்க வேண்டாம். வன்முறை நம் எதிரி.
தயவு செய்து அதிக எதிரிகளை உருவாக்காதீர்கள். அமைதியாக இருங்கள், நாட்டைக் கட்டியெழுப்பத் தயாராகுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.