மிரட்டும் காங்., தலைவர்கள்; குமாரசாமி 'பகீர்' குற்றச்சாட்டு
மிரட்டும் காங்., தலைவர்கள்; குமாரசாமி 'பகீர்' குற்றச்சாட்டு
ADDED : ஆக 18, 2024 11:28 PM

பெங்களூரு : ''காங்கிரஸ் அரசு, என்னை மிரட்டி பிளாக்மெயில் செய்கிறது. இதற்கு நான் பணிய மாட்டேன்,'' என மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்,
பெங்களூரின், சேஷாத்ரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு என்னை மிரட்டி, பிளாக்மெயில் செய்கிறது. இதை தான் பொருட்படுத்தமாட்டேன். இத்தகைய மிரட்டல்களுக்கு பணியும் பழக்கம் எனக்கு இல்லை. காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலை, நான் பொருட்படுத்தவில்லை.
ஏதோ பழைய வழக்குகளை கிளற முற்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை முன் வைத்து, கவர்னரை அவமதிக்கின்றனர். 2006ல் என் மீது, சட்டவிரோத சுரங்கத்தொழில் குற்றச்சாட்டு எழுந்த போது, அதை நான் மட்டுமே எதிர்கொண்டேன். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை குறுக்கே நிறுத்தி, பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தவில்லை.
கோழைத்தனமாக நடந்து கொள்ளவில்லை. தைரியமாக நான் ஒருவனே வழக்கை சந்தித்தேன்.
குமாரசாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என, முதல்வர் சித்தராமையா உட்பட பலர் கேள்வி எழுப்புகின்றனர். 2006ல் நான் முதல்வரான இரண்டே மாதத்தில், சுரங்க உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக, என் மீது குற்றம் சுமத்தினர்.
இதை பற்றி ஒரு சி.டி., தயாரிக்க, 'சி.டி., சிவு' முயற்சித்தார். சட்டசபை கூட்டத்துக்கு வந்து, ஆப்பரேஷன் சக்சஸ் என, கூறினார். என்னை பற்றி சட்டசபையில் விவாதித்தனர்.
நான் தன்னந்தனியாக போராடினேன். இது சித்தாமையாவுக்கு நினைவுள்ளதா.
சித்தராமையா போன்று, வீதியில் தீ வைத்து எரியுங்கள் என, தொண்டர்களை நான் துாண்டவில்லை. ஜந்தகல் மைனிங் வழக்கு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இவர்கள் தேவையென்றால் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லட்டும். வேண்டாம் என, இவர்களை தடுத்தது யார்.
யாரோ ஒருவர், சித்தராமையாவுடன் பாறை போன்று நிற்பதாக, கூப்பாடு போடுகிறார். அந்த பாறையால் தான் சித்தராமையவுக்கு டேஞ்சர். இவருக்கு பாறையால்தான் இந்த கதி வந்துள்ளது.
வயநாடு, உத்தரகன்னடாவில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் பாறைகளும் வந்து விழுந்தன. இந்த பாறைகளே மக்களின் உயிரை பலிவாங்கின. அதுபோன்று சித்தராமையாவுக்கு, பாறையால்தான் அழிவுக்காலம் துவங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

