'வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப தேசிய கல்வி கொள்கை அறிமுகம்'
'வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப தேசிய கல்வி கொள்கை அறிமுகம்'
ADDED : ஜூலை 15, 2024 12:31 AM
இந்துார்: “வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பவே புதிய தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முக்கிய பங்கு
மத்திய பிரதேசத்தில் உள்ள 55 மாவட்டங்களிலும், புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட 'பி.எம்., காலேஜ் ஆப் எக்சலன்ஸ்' எனப்படும் பிரதமரின் சிறப்பு கல்லுாரிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.
இந்துாரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு கலை மற்றும் வணிகக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
நம் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கொண்டாடும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதில், புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா வளர்ந்த நாடாக மாற, கல்வியின் அடித்தளம் மிகவும் அவசியமாகும்.
இது ஏற்கனவே சிறப்பான கட்டமைப்புடன் உள்ள நிலையில், அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சிந்திக்கும் திறன்
அடுத்த 25 ஆண்டுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சிறந்த தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி காட்டியுள்ளார்.
வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பவே அவர் இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார். இது, மாணவர்களை நம் பண்டைய கலாசாரத்துடன் இணைக்கும்; அவர்களுடைய சிந்திக்கும் திறனை வளர்க்கும்.
புதிய கல்விக் கொள்கை நாட்டிலேயே முதன்முறையாக ம.பி.,யில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான பாடத்திட்டம் ஹிந்தியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.