ஐபோன் 16க்கு எகிறிய மவுசு; இரவு முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்
ஐபோன் 16க்கு எகிறிய மவுசு; இரவு முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்
ADDED : செப் 20, 2024 08:57 AM

புதுடில்லி: ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடங்கிய நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் இரவு முதலே வாடிக்கையாளர்கள் திரண்டு வருகின்றனர்.
முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஸ்மார்ட் போன் சீரிஸ் 16 , கம்ப்யூட்டர் மற்றும் ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவற்றின் தயாரிப்புகளை ஆண்டு தோறும் செப்டம்பரில் அறிமுகம் செய்து வருகிறது. இதன் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
அதன்படி, கடந்த 9ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள், மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 10 மாடல்களில் ஸ்மார்ட் வாட்ச்''கள் என பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், ஐபோன் 16 சீரிஸின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இன்று(செப்.,20) துவங்கியது. மும்பை பி.கே.சி.,யில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நள்ளிரவு முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஐபோன் 16ஐ வாங்க ஆர்வம் காட்டினர். அதேபோல, டில்லியிலும் பெருமளவிலான மக்கள் ஐபோன்களை வாங்க குவிந்தனர்.
இதனிடையே, நுழைவு வாயிலின் கேட் திறந்ததும் பொதுமக்கள் உள்ளே ஓடிச் செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம், ஐபோன் மீது பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.