ADDED : ஆக 29, 2024 10:53 PM

மல்லேஸ்வரம்: ''மகளிர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்தாலும், கர்நாடக காங்கிரஸ் அரசு, பொறுப்பின்றி செயல்படுகிறது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில், பா.ஜ., மகளிர் அணியின் மாநில கருத்தரங்கம், அக்கட்சியின் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் நேற்று நடந்தது.
கருத்தரங்கை, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா துவக்கி வைத்து பேசியதாவது:
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அரசின் தோல்விகளை சுட்டி காண்பித்து போராட்டம் நடத்த வேண்டியது அவசியம். கர்நாடக காங்கிரஸ் அரசு, மக்கள் விரோத செயலில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய அரசை கண்டித்து, மக்கள் நலன் கருதி போராட்டம் நடத்தி வருகிறோம்.
காங்கிரஸ் அரசு அமைந்த பின், கர்நாடகாவில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் மீதான தாக்குதல்கள் அதிகமாகி கொண்டே உள்ளன.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, 'மூடா' முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., தரப்பில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இனி மகளிர் மீது நடக்கும் துன்புறுத்தலை கண்டித்து போராட்டம் நடத்துவது அவசியம். மகளிர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்தாலும், கர்நாடக காங்கிரஸ் அரசு, பொறுப்பின்றி செயல்படுகிறது.
ஆட்சி அமைந்து, ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை ஒரு வளர்ச்சி பணியும் நடக்கவில்லை. குடும்ப தலைவிகளுக்கு கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 2,000 வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால், மாதா மாதம் தொகை வருவதில்லை.
லோக்சபா தேர்தலுக்கு, நான்கு நாட்கள் இருக்கும் போது, 3 மாத தவணையை ஒரே முறையாக வழங்கினர். இனி உள்ளாட்சி தேர்தல் நெருங்கும்போது தான், பாக்கியுள்ள மீதி தவணை வழங்குவர். சக்தி திட்டத்தால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
மகளிர் அணியை பலப்படுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார். மைசூரு பாதயாத்திரையின் போதும், ஏராளமான மகளிர் உற்சாகமாக பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

