பூண்டு காய்கறியா...? நறுமணப் பொருளா...? இப்படியொரு அக்கப்போரா...? ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை பாருங்க!
பூண்டு காய்கறியா...? நறுமணப் பொருளா...? இப்படியொரு அக்கப்போரா...? ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை பாருங்க!
ADDED : ஆக 14, 2024 11:45 AM

இந்தூர்: பூண்டு தொடர்பாக விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே 9 ஆண்டு காலமாக நிலவி வந்த குழப்பத்திற்கு ஐகோர்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சட்டப்போராட்டம்
இந்திய குடும்பங்களின் சமையலில் எப்போதுமே பூண்டுக்கு முக்கிய இடமுண்டு. மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டுக்கு, மார்க்கெட்டில் எப்போதும் டிமாண்ட் இருக்கும். இந்த பூண்டு விற்பனை தொடர்பாக, மத்திய பிரதேசத்தில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் 9 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடந்து வந்தது தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குழப்பம்
அதாவது, பூண்டு காய்கறி வகையைச் சேர்ந்ததா? அல்லது நறுமணப் பொருட்களின் வகையைச் சேர்ந்ததா? என்பதுதான் பிரச்னை. கடந்த 2015ம் ஆண்டு சில விவசாயிகள் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, பூண்டு காய்கறி வகையில் சேர்க்கப்பட்டது. வேளாண் துறையின் இந்த முடிவை எதிர்த்து உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டுகளுக்கான கமிஷன் ஏஜெண்ட் சங்கம் 2016ல் இந்தூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 2017ல் ஏஜெண்டுகள் சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்தது. பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து முகேஷ் சோமானி என்பவர் மேல்முறையீடு செய்தார்.
ம.பி.,க்கு மட்டும்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காய்கறி பட்டியலிலேயே பூண்டு தொடரும் என்றும், விவசாயிகள் எந்தவொரு கமிஷனும் கொடுக்காமல், நேரடியாக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம் என்று தீர்ப்பை வழங்கினார். மேலும், இந்த உத்தரவு மத்திய பிரதேசத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்ப்பது ஏன்?
பூண்டு, காய்கறி வகைகளில் சேர்க்கப்பட்டால், நேரடியாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு எடுத்து செல்லலாம். ஆனால், நறுமணப் பொருட்களின் கீழ் இருந்தால், அதற்குரிய சங்கங்களின் வாயிலாகவே விற்பனை செய்ய முடியும் என்பது விதிமுறையாகும். இதுவே பிரச்னைக்கு காரணமாக அமைந்து விட்டது.