வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் தான் மரியாதையா? சர்ச்சையில் பிரசித்தி பெற்ற கோயில்; வைரலான வீடியோவால் வந்தது சிக்கல்
வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் தான் மரியாதையா? சர்ச்சையில் பிரசித்தி பெற்ற கோயில்; வைரலான வீடியோவால் வந்தது சிக்கல்
ADDED : செப் 15, 2024 05:59 PM

மும்பை: மகாராஷ்டிராவில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜ கணபதி கோயிலில் தரிசனத்தின் போது, பக்தர்களிடம் கோயில் நிர்வாகிகள் காட்டிய பாகுபாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பிரசித்தி லால்பாக் ராஜ கணபதி கோயில், அரசியல் முதல் தொழிலதிபர்கள் வரை பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் அதிகம் வந்து செல்லும் கோயிலாகும். இதனால், எப்போதும், இந்தக் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
அண்மையில் இந்தக் கோயிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், வி.ஐ.பி.,க்கள் தரிசனத்தில் வந்தவர்களுக்கு, சாமியின் பாதத்தை தொட்டு, போட்டோ எடுத்துச் செல்லும் அளவுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. மற்றொரு புறம், பொது தரிசனத்தில் வரும் பக்தர்களை கோயில் ஊழியர்கள், வேகவேகமாக தள்ளி விடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மும்பை ஐகோர்ட்டில் அஷிஷ் ராய் மற்றும் பன்கஜ்குமார் மிஸ்ரா ஆகிய இரு வக்கீல்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், பொது தரிசனத்தில் செல்லும் குழந்தைகள், பெண்கள், வயது மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவமதிக்கப்படுவதாகவும், கோயில் ஊழியர்களால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்த முறை மிகவும் மோசமான ஒன்று. லால்பாக் ராஜ கணபதி கோயிலில் காலம் காலமாக இது நடந்து வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில், லால்பாக் ராஜ கணபதி கோயில் விரைவில் வி.ஐ.பி.,க்களுக்கான கோயிலாக மாறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.