வாரிசுகளுக்கு 'சீட்' வழங்கியது சரியா? வாக்காளர்கள் கையில் இறுதி முடிவு
வாரிசுகளுக்கு 'சீட்' வழங்கியது சரியா? வாக்காளர்கள் கையில் இறுதி முடிவு
ADDED : ஏப் 06, 2024 11:11 PM

பெலகாவி: ''லோக்சபா தேர்தலில் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு சீட் வழங்கியது கட்சியின் முடிவு. எங்களை வெற்றி பெற செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது வாக்காளர்கள் முடிவு செய்யட்டும்,'' என, பெலகாவி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா தெரிவித்தார்.
பெலகாவியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா அளித்த பேட்டி:
இம்முறை காங்கிரஸ், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் சார்பாக பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
பா.ஜ., எதுவும் செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அப்பகுதி மக்களின் சார்பில் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். அத்துடன் என் தந்தையின் வளர்ச்சிப் பணிகள், நிச்சயம் எனக்கு கைகொடுக்கும்.
காங்கிரஸ் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் 95 சதவீதம் பெண்கள் பயனடைந்து உள்ளனர். எனவே நிச்சயம் எங்களுக்கு உதவுவர்.
லோக்சபா தேர்தலில் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு 'சீட்' வழங்கியது கட்சியின் முடிவு. எங்களை லோக்சபாவுக்கு அனுப்ப வேண்டுமா, வேண்டாமா என்பது வாக்காளர்கள் முடிவு செய்யட்டும்.
என்னை தேர்வு செய்தால் உள்ளூர் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பேன். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். பெண்களுக்கான உரிமையை பெற்றுத்தருவேன்.
இம்முறை சிக்கோடியில் காங்கிரஸ் அலை வீசுகிறது. தற்போதைய எம்.பி., ஐந்து ஆண்டுகளாக எந்த வகையிலும் தொகுதியை வளர்ச்சி அடைய செய்யவில்லை என, மக்கள் கூறுகின்றனர்.
எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. வெற்றி பெற முயற்சிப்பேன். என் குடும்பத்தினர், கட்சி தொண்டர்களின் ஆதரவும், பெரியவர்களின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

