ஒரே இரவில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியுமா? காங்கிரசாருக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி
ஒரே இரவில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியுமா? காங்கிரசாருக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி
ADDED : ஜூலை 29, 2024 05:04 AM

மைசூரு : ''மேகதாது திட்டத்தை ஒரே இரவில் செயல்படுத்த முடியுமா? காவிரி நீரை திறந்து விடுவது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினரா,'' என மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தற்போது கர்நாடகாவில், அதிகமான மழை பெய்கிறது. இதனால் தமிழகத்துக்கு அதிகமான நீர் செல்கிறது. இந்த விஷயமாக டெக்னிகல் வல்லுனர்களுடன், ஆலோசிப்பது நல்லது. மேகதாது திட்டத்தை, ஒரே நாளில் செயல்படுத்த முடியாது. திட்டத்தை செயல்படுத்த, நானும் முயற்சிக்கிறேன்.
மாற்றுங்கள்
மத்திய அரசு பட்ஜெட்டில், கர்நாடகாவுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்காமல், அநியாயம் செய்வதாக காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.
இவர்கள் தங்களின் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். தேவையின்றி மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியபடி திரிவதை நிறுத்த வேண்டும்.
மாநிலத்தின் உண்மையான நிலையை, மத்திய அரசிடம் தெளிவாக விவரிக்க வேண்டும். அதை விட்டு விட்டு, அனைத்துக்கும் மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல.
பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசு 5,300 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. கர்நாடகாவுக்கு மத்திய அரசு எந்த அநியாயமும் செய்யவில்லை. மாநிலமே தனக்கு அநியாயம் செய்து கொள்கிறது.
ட்டங்களை செயல்படுத்த, மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு, தன் பங்கு தொகையை வழங்கும். மாறாக மத்திய அரசை திட்டுவது சரியல்ல.
நிதி எங்கே?
மாநில அரசின் திட்டங்களில், என்னென்ன அநியாயம் நடந்துள்ளது என்பதை, சி.ஏ.ஜி., அறிக்கையில் நானும் பார்த்தேன். மாநில அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு, நிதியை எங்கு வைத்துள்ளது.
நான் முதல்வராக இருந்த போது, குடகில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு, மிகவும் உதவியாக இருந்தது.
பிரதமரே நேரடியாக என்னை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொண்டார். அனைத்து உதவிகளையும் செய்வதாக தைரியம் கூறினார்.
இத்தகைய சூழ்நிலையை, காங்கிரஸ் அரசு ஏன் ஏற்படுத்தவில்லை. மாநில எம்.பி.,க்களை திட்டுவதால் என்ன பயன்.
இவ்வாறு அவர் கூறினார்.

