ADDED : ஜூலை 09, 2024 02:29 AM

புதுடில்லி :ஜாமினில் விடுவிக்கப்படுபவர், தன் இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில், 'கூகுள் மேப் லொகேஷன்' பகிர்ந்து கொள்ளும் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வழக்கு ஒன்றில், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜால் புய்யான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு, இந்த நபர் எங்கிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக, கூகுள் மேப் லொகேஷனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை முறையானதல்ல.
இந்த நிபந்தனை, அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும்.
இந்த வழக்கில், கூகுள் நிறுவனம் ஒரு வாதியாக இல்லை.
இருப்பினும், லொகேஷன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை அளிக்க அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது.
அதுபோல, இந்த நபர் இந்தியாவை விட்டு தப்பி செல்ல மாட்டார் என்று, இந்தியாவில் உள்ள நைஜீரிய துாதரகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
எந்த நாட்டு துாதரகமும் இதுபோன்ற உத்தரவாதத்தை அளிக்க முடியாது.
இதனால், இந்த நபரை ஜாமினில் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.