எதிர்கட்சி தலைவர் பதவி தப்புமா? சொந்த கட்சிக்குள் அசோக்கிற்கு நெருக்கடி
எதிர்கட்சி தலைவர் பதவி தப்புமா? சொந்த கட்சிக்குள் அசோக்கிற்கு நெருக்கடி
ADDED : ஜூலை 02, 2024 10:43 PM

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ., தோல்வி அடைந்தது. வெறும் 66 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது.
இந்த தோல்வியால் கடும் அதிருப்தி அடைந்த பா.ஜ., மேலிடம், சட்டசபைக்கு உடனடியாக எதிர்க்கட்சித் தலைவரை நியமனம் செய்யவில்லை.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின் நடந்த முதல் கூட்டத் தொடர், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமலேயே நடந்தது. இதனால் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், பா.ஜ.,வை கிண்டல் அடித்தனர்.
ஒரு வழியாக, தேர்தல் முடிந்து, ஆறு மாதங்களுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக, பெங்களூரு பத்மநாப நகர் தொகுதி எம்.எல்.ஏ., அசோக் நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளரும் ஆவார்.
பெங்களூரு உத்தரஹள்ளி தொகுதியிலிருந்து மூன்று முறையும், பத்மநாப நகர் தொகுதியில் இருந்து நான்கு முறையும், எம்.எல்.ஏ., ஆகியிருந்தார். வருவாய், போலீஸ், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்த அனுபவம் இருந்ததால், எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆனதிலிருந்து, அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை முன்நின்று நடத்தவில்லை என, அசோக் மீது சொந்த கட்சியினரே அதிருப்தி அடைந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரிலும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அசோக் எதுவும் பேசவில்லை.
ஏதாவது பேசினால், அரசியலில் அனுபவம் வாய்ந்த சித்தராமையா, தனது பேச்சு மூலம், அசோக்கை அடக்கி விடுகிறார்.
முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும், அசோக் மீது அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அரசுக்கு எதிராக ஆதாரத்துடன் பேச வேண்டும். வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்று கூறி, அசோக்கிற்கு குட்டு கொடுத்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரின்போது, அசோக்கிற்கு, முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர் தோளோடு தோள் நின்றனர்.
தற்போது அவர்கள் இருவரும் எம்.பி., ஆகிவிட்டனர். இதனால் இனி சட்டசபையில் அசோக்கிற்கு உதவியாக நிற்க, அனுபவம் வாய்ந்தவர்கள் யாரும் இல்லை.
அசோக் ஆதாரத்துடன் எதுவும் பேசாமல் குற்றச்சாட்டுகள் மட்டுமே கூறி வருவதாக, சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அசோக்கை மாற்றிவிட்டு அரசு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் ஒருவரை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், கர்நாடக பா.ஜ.,விற்குள் பேச்சு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- நமது நிருபர் -