தீயணைப்பு பாதுகாப்பு வசதி உள்ளதா? மைசூரில் சுகாதார துறை 'அலெர்ட்'
தீயணைப்பு பாதுகாப்பு வசதி உள்ளதா? மைசூரில் சுகாதார துறை 'அலெர்ட்'
ADDED : மே 29, 2024 04:18 AM
மைசூரு, : மைசூரு மாவட்டத்தில் 15 மருத்துவமனைகளில் மட்டுமே தீ விபத்து தடுப்பு சாதனங்கள் உள்ளன. பல மருத்துவமனைகளில் இத்தகைய சாதனங்கள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
புதுடில்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில், சில நாட்களுக்கு முன்பு நடந்த தீ விபத்தில் ஏழு பச்சிளம் குழந்தைகள் பலியாகின. இந்த சம்பவத்துக்கு பின், மைசூரின் சுகாதாரத்துறை உஷார் ஆகியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீ விபத்தைத் தடுக்கும் வசதிகள் உள்ளதா என, ஆய்வு செய்ய துவங்கியுள்ளது. இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
1,600 மருத்துவமனைகள்
மைசூரு நகர் உட்பட மாவட்டத்தில் 160 அரசு மருத்துவமனைகள் உள்ளன. கிளினிக்குகள், லேப் என, 1,600 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 15 மருத்துவமனைகளில் மட்டும், தீ விபத்தைத் தடுக்கும் சாதனங்கள் உள்ளன. மற்ற மருத்துவமனைகளில் இத்தகைய சாதனங்கள் இல்லை.
தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையிடம், தடையில்லா சான்றிதழும் பெறவில்லை. சில மருத்துவமனைகள் சான்றிதழ் பெற்றிருந்தும், புதுப்பிக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து, சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தீயணைப்பு துறையிடம் சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை சுகாதாரத்துறை ஆய்வு செய்கிறது. பெறாத மருத்துவமனைகளுக்கு சென்று, தீ விபத்தை தடுக்கும் சாதனங்கள் பொருத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
புதுடில்லியை போன்ற சம்பவங்கள் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம். எனவே மாவட்ட சுகாதார அதிகாரி குமாரசாமி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்துள்ளார்.
இந்த குழுவின் அதிகாரிகள், ஊழியர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தீ விபத்து பாதுகாப்பு வசதிகள் செய்யும்படி, மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்படும். ஒருவேளை விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.