ADDED : மே 06, 2024 05:22 AM

தாவணகெரே : ''பா.ஜ.,வில் குடும்ப அரசியல் இல்லையா,'' என்று, தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன் கேள்வி எழுப்பினார்.
பிரபா மல்லிகார்ஜுன் அளித்த பேட்டி:
தாவணகெரே லோக்சபா தொகுதியில் பல பிரச்னைகள் உள்ளன. முக்கியமாக இப்பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் தேவைப்படுகிறது. தையல் கற்று கொள்ளும் பெண்கள், பெங்களூரில் உள்ள, ஆயத்த ஆடை தொழிற்சாலைக்கு வேலை தேடி செல்கின்றனர். இங்கு ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் வந்தால், பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
நான்கு முறை பா.ஜ.,வின் சித்தேஸ்வர் எம்.பி.,யாக இருந்து உள்ளார். கண்ணுக்கு தெரியும் பிரச்னைகளை கூட சரி செய்யவில்லை. ஹிந்துத்வா, ராமர் கோவில் பற்றி பேசுகின்றனர். மக்கள் பிரச்னைகளை பற்றி, கொஞ்சமாவது கவலைப்பட வேண்டாமா.
வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவின் முயற்சியால் வறட்சி நிவாரணம் ஓரளவு கிடைத்து உள்ளது. காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ., கூறுகிறது. அந்த கட்சியில் குடும்ப அரசியல் இல்லையா. பிறரை பார்த்து கை காட்டுவது எளிது.
கட்சி மேலிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளது. இதில் குடும்ப அரசியல் எங்கு உள்ளது. 'கிரஹ லட்சுமி' திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
கல்லுாரி மாணவி நேஹா கொலை வழக்கு, என்னை உலுக்கியது. பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, தற்காப்பு கலைகளை கற்று கொள்ள வேண்டும். பெண்கள் சமையல் செய்ய மட்டும் தான் லாயக்கு என்று, எனது மாமனார் சாமனுார் சிவசங்கரப்பா கூறவில்லை. அவரது கருத்தை பா.ஜ.,வினர் திரித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.