28 தொகுதியிலும் வெற்றி சாத்தியமா? பா.ஜ.,வுக்கு சித்தராமையா கேள்வி!
28 தொகுதியிலும் வெற்றி சாத்தியமா? பா.ஜ.,வுக்கு சித்தராமையா கேள்வி!
ADDED : மார் 25, 2024 06:29 AM

மைசூரு: ''லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும், வெற்றி பெறுவது சாத்தியமா,'' என்று, பா.ஜ.,வுக்கு, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன், மைசூரில் உள்ள ஹோட்டலில், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மைசூரு, சாம்ராஜ்நகர் தொகுதிகளில், வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மைசூரில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் யதுவீரை, விமர்சித்து பேச வேண்டாம். பா.ஜ.,வை மட்டும் விமர்சித்து பேசுங்கள் என்று, கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டி:
பலன் கிடைக்கும்
லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சீட் கொடுத்து உள்ளோம். கோலார், சிக்கபல்லாப்பூர், சாம்ராஜ்நகர், பல்லாரி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அந்த நான்கு தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்வில், எந்த குழப்பமும் இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில், நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
பா.ஜ.,வினரை போன்று, எங்களுக்கு பொய் பேச தெரியாது. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமா?. எங்களால் 20 இடங்களில் வெற்றி பெற முடியும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால், எங்களுக்கு பலன் கிடைக்கும்.
குடும்ப அரசியல்
கடந்த தேர்தலில் ம.ஜ.த.,வுடன், கூட்டணி வைத்து சிரமப்பட்டோம். பா.ஜ., அளிக்கும் வாக்குறுதிகளை, ஒருபோதும் நிறைவேற்றுவது இல்லை. ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று, பிரதமர் மோடி கூறினார்; அதை செய்தாரா?
வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றும் கூறினார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. எங்கள் கட்சியில் குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மக்கள் விரும்பும் நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளோம்.
குப்பி எம்.எல்.ஏ., சீனிவாஸ் கூறியதை, ஊடகங்கள் முழுமையாக காட்டவில்லை. முதல்வர் சித்தராமையா ஏழைகளுக்காக உழைத்தவர்.
மக்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேறு எதுவும் தவறாக கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

