ADDED : ஜூன் 03, 2024 11:59 PM
ஜெருசலேம்: மாலத்தீவு நாட்டில், இஸ்ரேல் மக்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு சுற்றுலா சென்றவர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி உள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள, ஆசிய நாடான மாலத்தீவு சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது.
சீன ஆதரவாளரான முகமது முய்சு, கடந்தாண்டு இறுதியில் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது.
அதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வருவதற்கு, மாலத்தீவுகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள், மாலத்தீவுக்கு வருவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது. மாலத்தீவுகளின் முடிவைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி, இஸ்ரேல் அரசு நேற்று அறிவித்து உள்ளது.
இந்த பிரச்னை குறித்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேல் துாதரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் மக்கள் தங்களுடைய சுற்றுலாவுக்கு செல்வதற்கான பட்டியலில், முதலில் இந்தியாவின் லட்சத்தீவுகளை சேர்க்க வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் லட்சத்தீவுகள் கடற்கரைகள் சுற்றுலாவுக்கு மிகவும் உகந்தவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.