ADDED : ஆக 12, 2024 04:37 AM

ஹோசியார்பூர் : பஞ்சாபில் வெள்ளம் கரைபுரண்டோடிய ஆற்றை காரில் கடக்க முயன்ற போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மற்றும் டிரைவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். மேலும் இருவரை தேடும் பணி நடக்கிறது.
பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் அருகே ஜெய்ஜான் பகுதியில் உள்ள ஆற்றில், கனமழை காரணமாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், ஹிமாச்சல் மாநிலம், உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பஞ்சாபின் எஸ்.பி.எஸ்., நகர் மாவட்டத்துக்குச் சென்றனர்.
ஜேய்ஜான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருந்த போதும், காரை ஆற்றின் குறுக்கே டிரைவர் செலுத்தினார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய கார் 200 மீட்டர் துாரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இதில், கார் டிரைவர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர். இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவரை மட்டும் ஜே.சி.பி., உதவியுடன் உள்ளூர் மக்கள் மீட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 'ஆற்றின் குறுக்கே டிரைவர் காரை செலுத்தியபோது அப்பகுதியினர் எச்சரித்து உள்ளனர்.
'ஆனால், அதை பொருட்படுத்தாமல், டிரைவர் காரை ஓட்டிச் சென்ற போது, கார் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது' என்றனர்.

