ADDED : ஜூலை 24, 2024 11:25 PM

பெங்களூரில் உள்ள ஐ.டி., தனியார்- பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர், வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விரும்புவர்.
பெங்களூரை சுற்றியுள்ள கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு, மாண்டியா, ராம் நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள, சுற்றுலா தலங்களுக்கு அதிகம் செல்வர்.
அதிலும் குழந்தைகளை கவரும் சுற்றுலா தலங்களை தேடிச் செல்வர். இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது 'சூலப்பன தின்னே மரப்பூங்கா'.
சிக்கபல்லாபூர் அருகே கொத்தனுார் கிராமத்தில் உள்ளது சூலப்பன தின்னே மரப்பூங்கா. இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள், ஆம்லா, அசோக், அஸ்வகந்தா, இந்தியன் பெப்பர், வேப்பிலை, துளசி, சதாவரி, கலிஹரி உட்பட பல்வேறு வகைகளை சேர்ந்த மருத்துவ குணம் நிறைந்த செடிகள் உள்ளன. அங்கிருந்து செடிகளை வாங்கி வந்து வளர்க்கலாம்.
ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாகவும் இந்த பூங்கா திகழ்கிறது. குடும்பத்தினருடன் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க ஏற்ற இடமாக உள்ளது.
இங்கு வசிக்கும் பறவைகளை பார்த்து குழந்தைகளும் உற்சாகம் அடைகின்றனர். காலையில் இருந்து மாலை வரை பொழுதை போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த மரப்பூங்கா திகழ்கிறது. தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பூங்கா திறந்திருக்கும்.
சூலப்பன தின்னே மர பூங்காவின் நுழைவுவாயில்.

