காணாமல் போனவர் உடல் மீட்பு கள்ளக்காதலியே கொன்றது அம்பலம்
காணாமல் போனவர் உடல் மீட்பு கள்ளக்காதலியே கொன்றது அம்பலம்
ADDED : ஏப் 02, 2024 09:57 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் கடந்த வாரம் காணாமல் போனவர் உடல் மீட்கப்பட்டது.
புதுடில்லி ஆனந்த் பர்பத் குல்ஷன் சவுக்கில் வசித்தவர் மாதவ் சிங், 35. தனியார் தொழிற்சாலை காவலாளி.
அவரை இரண்டு நாட்களாக காணவில்லை என, உறவினர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஜோதி என்ற பெண்ணுடன் மாதவ் சிங்குக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த 25ம் தேதி, ஜோதி அழைத்ததால், பஞ்சாபி பஸ்தியில் உள்ள அவர் வீட்டுக்கு மாதவ் சிங் சென்றுள்ளார்.
போலீசார் ஜோதி வீட்டுக்கு சென்றபோது பூட்டியிருந்தது. அங்கு சோதனை நடத்திய போது, கழிவுநீர் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த மாதவ் சிங் உடலை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஜோதி மற்றும் அவரது கணவர் லெக்பால் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் அளித்த வாக்குமூலத்தின்படி, கொலை செய்ய உடந்தையாக இருந்த பல்ஜீத் நகரைச் சேர்ந்த சுர்ஜித் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
மாதவ் சிங்குடன் முறைகேடான தொடர்பில் இருந்ததையும், கடந்த 25ம் தேதி அவரை வீட்டுக்கு அழைத்து, சுர்ஜித்தின் உதவியுடன், அடித்துக் கொலை செய்ததையும் ஜோதி ஒப்புக் கொண்டார்.

