செவ்வாய் தோஷத்தை தீர்க்கும் இடகுஞ்சி மஹா கணபதி சுவாமி
செவ்வாய் தோஷத்தை தீர்க்கும் இடகுஞ்சி மஹா கணபதி சுவாமி
ADDED : செப் 02, 2024 09:07 PM

உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், இடகுஞ்சி என்ற இடத்தில், மஹா கணபதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருடேஸ்வராவில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், ஒற்றை கல்லில் நின்ற நிலையில் உள்ள மஹா கணபதி, வலது கையில் தாமரை மலர் மற்றும் இடது கையில் மோதகத்தை ஏந்தி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கழுத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட மணிகளை அணிந்து கொண்டுள்ளார். சுவாமியின் விக்ரஹம், 88 செ.மீ., உயரம், 59 செ.மீ., அகலம் கொண்டுள்ளது. விநாயகரின் வாகனமான மூஷிகா எனும் எலி, விக்ரஹத்தில் கிடையாது.
இந்த கோவில், 4 - 5ம் நுாற்றாண்டில் கோவில் கட்டபட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. சராவதி ஆற்றங்கரையில் கம்பீரமாக காணப்படுகிறது.
சுவாமியை காண ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டே இருப்பர். ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். கண்ணுக்கு எட்டும் துாரம் வரையில், பக்தர்களும்; அவர்கள் வந்த வாகனங்களும் காணப்படும். கர்நாடகா மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, கோவா, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
விநாயகருக்கு இஷ்டமான பலகாரங்களை படைத்து, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வேண்டி கொள்கின்றனர். தன்னை நம்பி வந்த பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும், தெய்வமாக திகழ்கிறார்.
குறிப்பாக பால கணபதி உருவத்தில் மஹா கணபதி காணப்படுவது சிறப்பு. செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கட சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கும். அன்றைய தினம், செவ்வாய் தோஷத்தில் இருந்து, விமோசனம் கிடைக்க செய்வார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
அன்றைய தினத்தில், ஒரு பொழுது விரதம் இருந்து, பய பக்தியுடன் சாமி கும்பிட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று நம்புகின்றனர். அந்த நாளில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்திருப்பர்.
இடகுஞ்சலி மஹா கணபதி கோவில், தினமும் காலை 6:00 மணி முதல், பகல் 1:00 மணி வரையிலும்; மதியம் 3:00 மணி முதல், இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தினமும் காலை 6:00 மணி, 11:00 மணி, இரவு 7:00 மணி என மூன்று முறை அபிஷேகம் நடக்கும். தினமும் நண்பகல் 12:30 மணிக்கு மஹா பூஜை நடக்கும். இந்த பூஜையில் பங்கேற்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.
பட்கல், ஹொன்னாவராவில் இருந்து, அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உள்ளது. ஹொன்னாவரா, முருடேஸ்வராவுக்கு ரயிலில் வந்து, அங்கிருந்து, பஸ் அல்லது டாக்சியில் வரலாம்.
விமானத்தில் வருவோர், மங்களூருக்கு வந்து, அங்கிருந்து டாக்சி அல்லது பஸ்சில் வரலாம். கோவில் சார்பில் தங்கும் விடுதி உள்ளது. தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
- நமது நிருபர் -