ADDED : ஏப் 04, 2024 10:51 PM

பெலகாவி,- ''ஜாதியை வைத்து அரசியல் செய்வது கர்நாடகாவில் எடுபடாது,'' என்று, பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி பெலகாவியில் பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டி:
பெலகாவி தொகுதியில் எனது வெற்றிக்காக, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் இணைந்து செயல்படுகின்றனர். இதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரசுக்கு எதிரான, நிலைப்பாட்டை கொண்ட கட்சியாக ம.ஜ.த., இருந்தது.
இக்கூட்டணி ஏற்கனவே ஒருமுறை இருந்தது. தற்போது அமைந்திருப்பது இயற்கையான கூட்டணி. தேவகவுடா மீது பிரதமர் மோடிக்கு, அளவு கடந்த மரியாதை உள்ளது.
ராமதுர்கா தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மஹாதேவப்பா யாதவத், காங்கிரசுக்கு செல்ல மாட்டார். அவர் என்னுடன் தொடர்பில் உள்ளார். வடமாவட்டங்களில் ம.ஜ.த.,வுக்கு வலுவான அடித்தளம் இல்லை என்று கூறுவது தவறு.
ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு இடத்தில் பலம் உள்ளது. ம.ஜ.த., கட்சி நிறைய இடங்களில், வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அதிக ஓட்டுகள் கிடைக்கின்றன.
பெலகாவியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், ஜாதி அரசியல் செய்கிறார். அத்தகைய அரசியல் கண்டிப்பாக எடுபடாது. நாட்டுக்கு பிரதமர் மோடி தேவை என்று, பெண்கள் கூறுகின்றனர்.
பெலகாவியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜ் தாக்கரே ஆகியோரிடம் கேட்டு உள்ளேன். அவர்கள் பிரசாரத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

