ஜக்தீப் தன்கரை பதவி நீக்க வேண்டும்: 87 ராஜ்யசபா எம்.பி.க்கள் கையெழுத்து?
ஜக்தீப் தன்கரை பதவி நீக்க வேண்டும்: 87 ராஜ்யசபா எம்.பி.க்கள் கையெழுத்து?
UPDATED : ஆக 09, 2024 11:07 PM
ADDED : ஆக 09, 2024 11:00 PM

புதுடில்லி: ராஜ்யசபாவில் எதிர்கட்சி எம்.பி.க்களிடம் மரியாதை குறைவாக பேசியதாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவாக பேசிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையும், சமாஜ்வாதி எம்.பி.,யுமான ஜெயா பச்சனுக்கும், சபை தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நேற்று காரசாரமான விவாதம் நடந்தது.
அப்போது பேசிய ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், நீங்கள் ஒரு பிரபல நடிகையாக இருக்கலாம். ஆனால் சபையின் நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நற்பெயர் உள்ளது.
நடிகர் என்பவர் இயக்குனருக்கு உட்பட்டவர் என்பது உங்களுக்கு தெரியும். எனக்கு யாரும் பள்ளிப் பாடம் நடத்த வேண்டாம். போதும்... போதும் என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஜெயா பச்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், காங்., மூத்த தலைவர் சோனியா தலைமையில், ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சி எம்.பி.,க் களை ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும், பேசும் விதமும் ஏற்க முடியாதவை. தடை செய்யப்பட்ட வார்த்தைகளை பேசிய ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய கோரி 80-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 67(ஆ)ன் கீழ் ராஜ்யசபா கவுன்சிலின் தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ராஜ்யசபா தலைவரை நீ்க்க முடியும். முன்னதாக தீர்மானம் கொண்டு வர ராஜ்யசபா தலைவருக்கு 14 நான்கு நாட்களுக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.