'மாஜி' முதல்வர் பொம்மைக்கு சிறை: அமைச்சர் செலுவராயசாமி ஆரூடம்
'மாஜி' முதல்வர் பொம்மைக்கு சிறை: அமைச்சர் செலுவராயசாமி ஆரூடம்
ADDED : ஆக 05, 2024 09:44 PM

மாண்டியா : ''மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த முறைகேடு உண்மையானால், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, அப்போதைய மூடா தலைவர் சிறைக்கு செல்வர்,'' என விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் இன்று நடக்கும் காங்கிரசின், 'மக்கள் இயக்கம்' மாநாடு ஏற்பாடுகளை, அமைச்சர் செலுவராயசாமி நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஜனநாயக முறையில் 135 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசை, வீழ்த்துவோம் என்று பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு கூறுவது சட்டப்படி குற்றமாகும்; சிறையிலும் அடைக்கப்படுவர். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
குமாரசாமி சொத்து
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, சிவகுமார் பல தொழில்களை செய்து வந்துள்ளார். அவர் சம்பாதித்த சொத்துகளுக்கு ஆவணங்கள் உள்ளன. அதேவேளையில், குமாரசாமிக்கு எந்த தொழிலும் செய்யாமல், பெங்களூரில் விமான நிலைய சாலை, நெலமங்களா சாலை, கெங்கேரி சாலைகளில் சொத்துகள் உள்ளன. திரையுலகின் மூலம் இவ்வளவு சொத்துகளை சம்பாதிக்க முடியுமா.
மழை பாதிப்பு பகுதிகளை குமாரசாமி பார்வையிடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மத்திய அரசு, தேசிய பேரிடர் நிவாரண நிதி மூலம், நிவாரணம் வழங்க வேண்டும். அரசியல் செய்யாமல், வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துங்கள்.
தொடர்பு இல்லை
மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த முறைகேடு உண்மையானால், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, அப்போதைய மூடா தலைவர் சிறைக்கு செல்வர்.
அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சரியாக செய்ய வேண்டும். அமைச்சரவை மாற்றம் குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிட தலைவர்கள் முடிவெடுப்பர்.
கே.ஆர்.எஸ், அணை நிரம்பி உள்ளது. ஜூலை 10ம் தேதி முதல் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் மக்கள் இயக்கம் மாநாட்டு பணிகளை, அமைச்சர் செலுவராயசாமி பார்வையிட்டார். இடம்: மாண்டியா.