காங்கிரசை அழிக்க பா.ஜ., முயற்சி பா.ஜ., மீது ஜமீர் அகமது கான் புகார்
காங்கிரசை அழிக்க பா.ஜ., முயற்சி பா.ஜ., மீது ஜமீர் அகமது கான் புகார்
ADDED : செப் 01, 2024 11:39 PM

தார்வாட்: ''முதல்வர் சித்தராமையா பிற்படுத்தப்பட்ட தலைவர் என்பதால் அவருக்கு தொந்தரவு கொடுத்து காங்கிரசை அழிக்க பா.ஜ.,வினர் திட்டமிடுகின்றனர்,'' என வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தனி நபர் கொடுத்த புகாரை தொடர்ந்து, முதல்வர் சித்தராமையாவிடம் விசாரிக்க கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார். புகார் கொடுத்த அன்றே விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்தாண்டு நவம்பரில், குமாரசாமி மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்குமாறு, லோக் ஆயுக்தா தரப்பில் அனுமதி கேட்டனர். அத்துடன், பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி மீதும் விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.
சித்தராமையாவின் மனைவிக்கு 2021ல் மூடா சார்பில் 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. அப்போது, முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தார். அவருக்கு மட்டுமல்ல, 125 பேருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் சித்தராமையாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதனால் அவரை வீழ்த்த முடியாது.
சித்தராமையா எப்போதும் புலி தான். இத்தகைய சூழ்ச்சிகளுக்கு அவர் பயப்பட மாட்டார். அவருக்கு அதிகரித்து வரும் புகழை பா.ஜ.,வால் ஜீரணிக்க முடியவில்லை.
பல்லாரி சிறைக்கு நடிகர் தர்ஷன் மாற்றப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எனக்கு நண்பராக இருக்கலாம்; நான் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கலாம். ஆனால், நான் டி.ஜி., அல்ல.
பரப்பன அக்ரஹாரா சிறையில் தர்ஷன் இருந்த படம் வெளியானதால், பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவை அனைத்தும் போலீஸ் துறையின் நடவடிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.