ADDED : ஏப் 29, 2024 05:52 AM

பெங்களூரு : வாக்குறுதி அட்டைகள் கொடுத்து வெற்றி பெற்றதாக, அமைச்சர் ஜமீர் அகமதுகான் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
கர்நாடக வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமதுகான். பெங்களூரு சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, சாம்ராஜ்பேட்டில் வீடு, வீடாக சென்று வாக்குறுதி அட்டைகள் அளித்ததால், ஜமீர் அகமதுகான் வெற்றி பெற்றார்.
இதனால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று, சாம்ராஜ்பேட்டையில் வசிக்கும் ஷஷாங்க் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி அருண் விசாரித்து வந்தார்.
மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி அருண் கூறுகையில், ''காங்கிரஸ் அளித்த வாக்குறுதி திட்டங்கள் தவறாக இருந்தால், திட்டங்கள் தவறு என்று கூறலாம்.
ஆனால் அதை சட்டவிரோதம் என்று கூற முடியாது. வாக்குறுதி திட்டங்கள் அரசு கருவூலத்திற்கு சுமையாக இருக்கிறது என்று மனுதாரர் கூறினால், அது வேறு விஷயம். நிர்வாக சீர்கேடு ஏற்பட்டால், எதிர்க்கட்சிகள் சுட்டிகாட்ட வேண்டும்,'' என்றார்.
ஜமீர் அகமதுகான் வெற்றியை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

