ADDED : ஜூன் 27, 2024 06:41 AM

பெங்களூரு : பீதர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே வெற்றிக்கு, முஸ்லிம் ஓட்டுகளே காரணம் என, கூறிய அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பீதர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சாகர் கன்ட்ரே வெற்றி பெற்றிருந்தார். 'இவருக்கு முஸ்லிம் வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், வெற்றி பெற்றார்' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், நேற்று முன்தினம் கூறினார். இது சர்ச்சைக்கு காரணமானது.
இது குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரில் அளித்த பேட்டி:
மக்கள் பிரதிநிதி ஒருவர் வெற்றி பெற்றார் என்றால், அவருக்கு அனைத்து சமுதாயங்களின் மக்களும் ஓட்டு போட்டிருப்பர். வெற்றி பெற்ற பின், தனக்கு எந்த சமுதாயத்தினர் ஓட்டு போட்டனர், யார் போடவில்லை என, ஆலோசித்தபடி காலத்தை கடத்துவது சரியல்ல.
தேர்தலில் வெற்றி பெற்ற பின், அமர்ந்திருக்க கூடாது. அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.