ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் குழப்பம்
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் குழப்பம்
ADDED : ஆக 27, 2024 12:53 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு செப்., 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. செப்., 18ல், முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், 44 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பா.ஜ., தலைமை நேற்று காலை வெளியிட்டது. ஜம்முவின் 36 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் எட்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என தலைவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், பா.ஜ., தலைமையகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
''கடந்த 18 ஆண்டுகளாக கட்சிக்காக இரவு - பகல் பாராமல் உழைத்துள்ளேன். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. எங்களை புறக்கணித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என, பா.ஜ., - எஸ்.சி., பிரிவின் தலைவர் ஜக்தீஷ் பகத் தெரிவித்தார்.
இப்படி கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்ததை தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்ற பா.ஜ., தலைமை, அதில் பல்வேறு திருத்தங்கள் செய்து, 16 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை சில மணி நேரங்களுக்கு பின் வெளியிட்டது.
முதல் பட்டியலில் இருந்து முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் பா.ஜ., தலைவர் சத்பால் சர்மா, 10 முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள 16 பேர் அடங்கிய பட்டியலில், மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பெண் வேட்பாளர் ஷகுன் பரிஹார் பெயர் இடம் பெற்றுள்ளன.
இவரது தந்தை அஜீத் பரிஹார், மாமா அனில் பரிஹார் ஆகியோர் 2018ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவிந்தர் ரெய்னா கூறியதாவது:
நீண்ட விவாதம் மற்றும் பரிசீலனைக்கு பின், முதல்கட்ட தேர்தலுக்கான 16 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பட்டியல் விரைவில் வெளியாகும்.
இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரும் முதல் பட்டியலில் இடம் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது.
எங்கள் கட்சி குடும்பம் போன்றது. இதில் யாருக்கு சீட் கிடைத்தாலும் பரவாயில்லை. இந்த தேசத்துக்கு தான் முன்னுரிமை, கட்சிக்கு இரண்டாம் இடம், தனிப்பட்ட நலனுக்கு கடைசி இடம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.